الأحد، 15 يناير 2012


ஹதீஸ்

சொர்க்கமும் நரகமும் உரையாடிக் கொண்டன. ஆணவக்காரர்களும் பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களும் என்னிடத்தில் நுழைவார்கள்
என்று நரகம் கூறியது. பலவீனர்களும் ஏழைகளும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது. அப்போது, நீ என்னுடைய தண்டனையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் தண்டனை வழங்குவேன்!
நீ என்னுடைய கிருபையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் கிருபை செய்வேன்! மேலும் நீங்கள் இருவரும் -மக்களால்- நிரப்பப்பட்டு விடுவீர்கள்! என்று நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 5081)


முஸ்லிம்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 7th November 2011
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அன்பு சகோதர, சகோதரிகளே! இத்தொடரின் முன்னுரையில் இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்றும் மற்ற மார்க்கங்களை எவர் விரும்பினாலும் அது நிராகரிக்கப்படும் என்பதை அறிந்தோம்.
நம்மில் வெகு சிலர் மார்க்கத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் மாற்றுமதக் கலாச்சாரங்களில் கவரப்பட்டு அதிலே ஈடுபடக் கூடியவர்களாக இருக்கின்றனர். இன்னும் சிலரோ நம்முடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டு விட்டோம் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மாற்றுமத வழிபாட்டுத் தலங்களை நோக்கிச் செல்கின்ற அவலநிலையும் பத்திரிக்கையின் வாயிலாக படிக்க நேரிடுகின்றது.
ஆனால் இறைவனோ, இஸ்லாமிய மார்க்கமல்லாது வேறொரு மார்க்கத்தைப் பின்பற்றினால் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக இருப்பார் என்று கடுமையாக எச்சரிக்கின்றான்.
“இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்” (அல்குர்ஆன்3:85.)
முஸ்லிம்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துக்கின்ற கிறிஸ்தவ மிஷனரிகளின் விஷமப் பிரச்சாரத்தின் விளைவாக மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர மக்களில் சிலர், ஏன் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று பொறியியல் மற்றும் மருத்துவ வல்லுனர்களாக இருக்கின்ற முஸ்லிம்கள்? சிலர் கூட ஈஸா நபியும் இறைவனால் அனுப்பட்ட இறைத் தூதர் தானே அவர்களைக் கூடப் பின்பற்றலாமே என்ற எண்ணத்திற்கு உள்ளாகின்றனர். இன்னும் சிலரோ அக்கிறிஸ்துவ மிஷனரிகளின் தீவிர பிரச்சாரத்தின் வாயிலாகவும், ஏழைகளிடம் பொருளாதாரத்தைக் காட்டி மயக்கியும் பாமர முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மாற்றி வருகின்றனர்.
இது இஸ்லாத்தைப் பற்றிய போதிய அறிவின்மையாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த கிறிஸ்தவர்கள், யூதர்கள் உட்பட அனைவரும் இறுதி தூதராகிய நமது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் அவர்கள் உணராததே காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரொருவர் – யூதரோ, கிறிஸ்தவரோ – என்னைப் பற்றி கேள்விப்பட்டு பிறகு என் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தூதுச் செய்தியை நம்பிக்கை கொள்ளாமல் மரணமாகின்றாரோ அவர் நரகவாசிகளைச் சேர்ந்தவரே தவிர வேறில்லை” அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்
மேலும் இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான்:
“(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் – ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் – அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (அல்குர்ஆன் 7:158.)
எனவே அன்பு சகோதரர்களே! நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு சத்திய இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பணியினை இறைவன் நம்மீது சுமத்தியிருக்கின்றான். சத்தியம் நம்மிடம் இருக்கின்றபோது நாம் செயல்படுவதில்லை! ஆனால் கிறிஸ்தவ மிஷனரிகளோ அசத்தியத்தையே தமது மூலதனமாகக் கொண்டு சத்தியத்தில் இருந்துக்கொண்டு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கின்றவர்களை அசத்தியத்தின்பால் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். நாம் நமது கடமையைச் செய்யாவிட்டால் நாம் அல்லாஹ்விடம் பதில் கூற கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தாக இறைவனின் கட்டளையின் பிரகாரம் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் ஈமான் கொள்வது என்பது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை உளப்பூர்வமாக ஏற்று அதன்வழி நடப்பதாகும்.
இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்!
இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் (ஈமானின் பர்லுகள்) ஆறு ஆகும். அவைகள்:
1) அல்லாஹ்வை நம்புவது
2) மலக்குகளை நம்புவது
3) வேதங்களை நம்புவது
4) தூதர்களை நம்புவது
5) மறுமையை நம்புவது
6) நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் விதித்த விதியின் பிரகாரமே நடக்கின்றது என்று நம்புவது
முஸ்லிமாக இருக்கக்கூடிய ஒருவர் இந்த ஆறு அடிப்படைகளையும் அவசியம் நம்பியே ஆகவேண்டும். இதில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்க இயலாது! ஏனெனில் இவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது இறைக்கட்டளையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்” (அல்குர்ஆன் 2:177.)
இஸ்லாத்தின் முதல் ஐந்து நம்பிக்கைகளைப் பற்றி மேற்கூறிய வசனத்தில் கூறிய இறைவன் பிறிதொரு வசனத்தில் விதியைப் பற்றிக் கூறுகின்றான்:
“நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் 54:49-50)
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலமாக புகாரியில் அறிவிக்கப்படும் ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள்
‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று கூறினார்கள்:
ஈமான் என்பது சொல்லும் செயலும் அடங்கியதாகும். நம்முடைய இபாதத்கள் மற்றும் செயல்களின் காரணமாக ஈமான் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும். இபாதத்கள் செய்வதால் ஈமான் அதிகரிக்கின்றது. அதுபோலவே பாவங்கள் செய்வதின் மூலம் ஈமான் குறையவும் செய்கின்றது.
எனவே ஈமான் என்பது உள்ளம், உடல் உறுப்புகளைச் சார்ந்தது ஆகும் என்பதை விளங்கமுடிகிறது. உள்ளத்தினால் ஈமானின் நம்பிக்கைகளை மனதார ஏற்று அவற்றை நாவினால் மொழித்து உறுதி பூண்டு இறைவனின் ஏவல் மற்றும் விலக்கல்களை நம் செயல்களின் மூலம் முறையே பேணி நடப்பதன் மூலம் ஈமானை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இது உறுதியாகின்றது.
அடுத்ததாக ஈமானின் முதலாவது நம்பிக்கையாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது எவ்வாறு? என்பதையும் முஸ்லிம்களிடையே காணப்படும் அல்லாஹ்வைப் பற்றிய தவறான எண்ணங்கள் யாவை என்பதையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொழுகை - தொடர் 









அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

ஜமாஅத் தொழுகையின் சிறப்பு

ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும், கடைவீதியில் தொழுவதை விடவும் 25 மடங்கு அல்லது அதைவிட அதிகம் சிறந்ததாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.

அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும்வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிராத்தித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 647, முஸ்லிம்.

ஏதேனும் ஒரு ஊரிலோ அல்லது காட்டுப் பகுதியிலோ மூன்று பேர்கள் இருந்து அவர்களிடையே (ஜமாஅத்தாக) தொழுகை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்கிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதைக் கடைபிடியுங்கள், ஏனெனில் தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபலிகரம் செய்கின்றது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபுத்தர்தா (ரலி) நூல்:அபூதாவூது.

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்-இப்னு உமர் (ரலி) நூல்:புகாரி 645, முஸ்லிம்.

பயன்கள்:
ஜமாஅத்துடன் தொழுவதற்கு சிறப்புகள் அதிகமுள்ளன.
ஒருவர் தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது மிகச்சிறந்தது.
ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவதை விட்டுவிடுவது ஷைத்தான் அவர் மீது ஆதிக்கம் கொள்வதற்குக் காரணமாகின்றது.

பள்ளிக்கு வரும் முறை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ண்pயமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்துகளை (ஜமாஅத்துடன்) தொழுங்கள், உங்களுக்குத் தவறிப்போனதைப் பூர்த்தி செய்யுங்கள் - நூல்:புகாரி 636, முஸ்லிம், திர்மிதி 326.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம் அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர், தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன நேர்ந்தது, (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள், அதற்குத்தோழர்கள், நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள், தொழுகைக்கு வரும்போது அமைதியாக வாருங்கள்! உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுது கொள்ளுங்கள், தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூகதாதா (ரலி) நூல் - புகாரி 635, முஸ்லிம்.

பயன்கள்:
தொழுகைக்காக கம்பீரத்துடன் அமைதியாக வருமாறு (நபியின் மூலம்) ஏவப்பட்டுள்ளது.
தொழுகைக்காக வேகமாக நடந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. ருகூவை அடைந்து கொள்வதற்காயினும் சரியே.

தொழுகைக்கு முற்கூட்டியே வந்து காத்திருப்பதன் சிறப்பு

ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும். அதாவது ஒருவர் உளூச்செய்து, அதை அழகாகவும் செய்து தொழுகைக்காகவே பள்ளிவாசலுக்குச் செல்வாராயின் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்து விட்டு தொழுமிடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா இவருக்கு நீ அருள் புரிவாயாக என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழுமிடத்தில்) இருக்கும்போதெல்லாம் தொழுகையிலேயே இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 647, முஸ்லிம்.

பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல் பரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டிப்போட்டுக் கொண்டு முந்தி வருவர். பின்னர் அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். மேலும் தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் அதற்காக முந்திச் செல்வர். சுபுஹுத் தொழுகையிலும் இஷாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவர்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார்- அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 615, முஸ்லிம்.

பயன்கள்:
தொழுகைக்காக சீக்கிரம் செல்வதில் சிறப்பு (போனஸ்) உண்டு.
தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பதில் அதிக நன்மை இருக்கிறது.

காணிக்கைத் தொழுகை

உங்களில் எவரேனும் பள்ளியில் நுழைந்தால் அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்-அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 444, முஸ்லிம், திர்மிதி 315.

ஜும்ஆ தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது சுலைக் அல் கத்பானி என்பவர் வந்து உட்கார்ந்து விட்டார். சுலைக்! எழுந்து இரண்டு ரக்அத்துகள் சுருக்கமாகத் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் வந்தால் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழட்டும் எனவும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர்- ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம், புகாரி 1166.

பயன்கள்:
பள்ளியில் நுழையும் போது அங்கு அமர விரும்புபவர் இரு ரக்அத்துகள் தொழுவது விரும்பத்தக்கது.
ஜும்ஆ நாளில் இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்றுவது விரும்பத்தக்கதாகும்.

தொழுகையை வலியுறுத்தும் எண்ணற்ற திருமறை வசனங்களில் ஒரு சில

29 : 45. (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக் இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக் நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

5 : 58. இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.

24 : 56. முஃமின்களே! நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்.

2 : 149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.

2 : 43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள் ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

2 : 153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

4 : 103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.

20 : 132. (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம் இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.

31 : 17. ''என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக் நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக் உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக் நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.

107 : 4,5. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்